மழைக்காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? மின்சார வாரியம் விளக்கம்
மழைக் காலங்களில் மின் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கியுள்ள மின்சார வாரியம், அவற்றை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மழைகாலத்தில் மக்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்ய வேண்டாத செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன்படி, வீட்டில் ஒயரிங்கை சரிபார்த்து, பழுது இருந்தால் சரிசெய்து கொள்ள வேண்டும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைக் கண்டால் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மின்கசிவு தடுப்பானை, மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த வேண்டும் என்றும், உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், மின்சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் அணைத்து வைக்க வேண்டும் என்றும், மின்சாரத்தால் தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்திவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்கம்பிகளில் துணிகளை உலர்த்தக் கூடாது, மின் கம்பங்களை நிலை நிறுத்தும் கம்பி, வேலி ஆகியவற்றை மழைக் காலங்களில் தொடக் கூடாது அவற்றின் அருகில் நிற்க கூடாது, மின் வேலி அமைக்கக் கூடாது, மின் நிலை நிறுத்திகளை வெட்டவோ, சேதப்படுத்தவோ கூடாது, குளியல் அறையிலும்.
கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது, மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது , இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்சி, கிரண்டர், தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.